ஆண்டி-வைரஸ் செயலிகள் இப்படித் தான் இயங்குகின்றன – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மால்வேர் மற்றும் வைரஸ் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக கூறும் செயலிகள் பெரும்பாலும் இப்படித் தான் இயங்குகின்றன.

ஆண்டி-வைரஸ் செயலிகள் இப்படித் தான் இயங்குகின்றன – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் மொபைல் போன்கள் மற்றும் டெஸ்க்டாப்களில் மிகவும் அவசியமான செயலிகளாக பலரும் பார்க்கும் ஆண்டிவைரஸ் செயலிகள் பற்றிய பகீர் தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் வெளியாகியிருக்கும் அறிக்கையில் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் பெரும்பாலான ஆண்டிவைரஸ் மற்றும் ஆண்டி-மால்வேர் செயலிகள் பயனற்றதாகவோ அல்லது நம்ப முடியாதவொன்றாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்த்ரியாவை சேர்ந்த ஆண்டிவைரஸ் சோதனை நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இந்நிறுவனம் 250 செயலிகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 2000 மால்வேர் செயலிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெறும் 30 சதவிகித செயலிகளே மால்வேர்களை ஓரளவு சரியாக கண்டறிந்தன. இதிலும் பெரும்பான்மை முடிவுகள் தவறாகவே இருந்தன.

ஆய்வாளர்கள் தேர்வு செய்த 250 செயலிகளை ஒவ்வொன்றாக ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆண்ட்ராய்டு சாதனங்களில் இவற்றை இன்ஸ்டால் செய்து, சாதனம் தானாக பிரவுசர் மூலம் மால்வேர் நிறைந்த செயலிகளை டவுன்லோடு செய்ய வைக்கப்பட்டன. இந்த வழிமுறை 2000 முறை பின்பற்றப்பட்டன, இதில் செயலிகளால் வைரஸ் அல்லது மால்வேர்களை கண்டறியமுடியவில்லை.

ஆண்டிவைரஸ் செயலிகளில் 2018 ஆம் ஆண்டின் பரவலான ஆண்ட்ராய்டு மால்வேர் அச்சுறுத்தல்களே சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்பதால், இந்த செயலிகள் கிட்டத்தட்ட 90 முதல் 100 சதவிகிதம் வரை மால்வேர்களை துல்லியமாக கண்டறிந்திருக்க வேண்டும். எனினும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட செயலிகளில் 170 செயலிகள் அடிப்படை சோதனைகளிலும் தேர்ச்சி பெறவில்லை.

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் பிளே ப்ரோடெக்ட் சேவையை வழங்கியிருக்கிறது. எனினும், பெரும்பான்மையான ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அறிமுகமில்லாத மூன்றாம் தரப்பு வலைதளங்களில் இருந்து APK வடிவில் இன்ஸ்டால் செய்கின்றனர். இவை அவர்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.