கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள மிகப்பெரிய ஆடம்பரக் கப்பல்

ஆடம்பர வசதிகளைக் கொண்ட ‘மிஸ் குயின் மேரி 2″ என்ற பயணக் கப்பல் கொழும்பிற்கான தனது கன்னிப் பிரயாணத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

1132 அடி நீளமுடைய மிஸ் குயின் மேரி 2 கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்துள்ள மிகப் பெரிய கப்பல்களில் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

சுமார் 3800 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் துறைமுகத்தை வந்தடைந்த மேற்படி கப்பலை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியக உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.

கடந்த வருடம் 47 பயணிகள் கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இவ்வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரை 12 பயணிகள் பிரயாண கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

மேற்படி ‘மிஸ் குயின் மேரி 2″ பயணிகள் கப்பல் கடந்த ஜனவரி 3ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்ததுடன், 108 இரவுகள் கடற்பிராந்தியத்தில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து, எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி மீண்டும் நியூயோர்க் திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த பயணிகள் கப்பலானது 5 விருந்துபசார நிலையங்கள், 12 மதுபான மற்றும் தேநீர் சாலைகள், 5 நீச்சல் தடாகங்கள், கூடைப்பந்து மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி நிலையம், சிகையலங்கார நிலையம் உள்ளிட்டவற்றை கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.