தமிழர்கள் 2009 பின்னர் கூட்டமைப்பால் ஏமாற்றப்படுகிறார்கள் – ரணிலிடம் மாவை தெரிவிப்பு

இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், போர் நிறைவடைந்த 10 வருடங்கள் கடந்துள்ளபோதும் போரினால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய பிரதேசங்கள் கட்டியெழுப்பப்படவில்லையென தெரிவித்துள்ள அவர், இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் தமிழ் மக்களின் எதிர்கால நலன்களை அடிப்படையாகக் கொண்டே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்ற இந்நிகழ்வில் மாவை சேனாதிராஜா பிரதமர் முன்னிலையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது. “நாட்டில் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதும் அவர்கள் மீள முழுமையாக கட்டியெழுப்பப்படவில்லை. தமிழர்கள் விடயத்தில் ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை அரசாங்கம் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழன வரலாற்றில் 60 ஆண்டுகளாக இனப்பிரச்சினை விடயத்தில் ஏமாற்றமடைந்தே வருகின்றோம்.

தென்னிலங்கை அரசினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டே வருகின்றோம். போரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி-ரணில் தலைமையலான நல்லாட்சி அரசினைக் கொண்டுவந்தோம். இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றி விட்டார்.

நல்லாட்சி அரசில் நீண்டகால பிரச்சினையான இனப் பிரச்சனைக்கு தீர்வாகக்கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருக்கிறது. பின்னர் நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூடவிருந்தது. அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒத்துக்கீடு செய்யப்படவிருந்தது.

ஆனால் அதற்கிடையில் எந்தக் கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடாது திருட்டுத்தனமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக கொண்டு வந்தார் ஜனாதிபதி மைத்திர். இதனால் வரவு செலவுத்திட்டம் உட்பட அனைத்து விடயங்களும் இழுத்தடிக்கப்பட்டன.

தற்போது ஜனாதிபதி இந்தியாவுக்ஷக சென்றபோது டெல்லியில் ஊடகவியாளர்கள் மத்தியில் ஆற்றிய உரை எமக்கு வருத்தம் அளிக்கின்றது. தமிழின வரலாற்றில் நாம் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம். அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் கூட அதிகமாக தமிழர்களே பாதிக்கப்பட்டனர். போரிலும் தமிழர்களே அதிகமாக கொன்றழிக்கப்பட்டனர்.

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து சர்வதேச உளவுத்துறை மற்றும் சர்வதேச கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அரசாங்கம் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சனைத் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை.

இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல்களிலும், தமிழர்கள் விடயத்தில் நிதானமாக சிந்தித்துச் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.