புலனாய்வுப் பிரிவுத் தலைவர்களை வெகுளிகள் என ட்ரம்ப் விமர்சனம்

ஈரான் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள் வழங்கிய அறிவிப்புக்கு விமர்சனத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவர்கள் வெகுளிகள் போன்றும் ஈடுபாடற்றுக் காணப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார். அதேபோல், வடகொரியா தொடர்பில் அவர்கள் வழங்கிய கருத்தையும் அவர் விமர்சித்தார்.

செனட் செயற்குழுவுக்கு முன்னால் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கைகளைச் சமர்ப்பித்த புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள், வடகொரியாவிடமிருந்து காணப்படும் அணுவாயுத அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுவதாகக் கூறியிருந்ததோடு, ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்குமிடையிலான அணுவாயுத ஒப்பந்தத்தை ஈரான் மீறவில்லையெனவும் தெரிவித்திருந்தனர். இந்தக் கருத்துகள், ஜனாதிபதி ட்ரம்ப்பின் கருத்துகளுக்கு முற்றிலும் முரணானவையாகும்.

“ஈரானின் ஆபத்துகள் என்று வரும் போது, புலனாய்வுப் பிரிவினர், மிகவும் ஈடுபாடற்றவர்களாகவும் வெகுளிகளாவும் காணப்படுகின்றனர். அவர்களில் பிழை” என ஜனாதிபதி ட்ரம்ப் கூறினார். ஈரானின் றொக்கெட் ஏவல்களைச் சுட்டிக்காட்டிய அவர், ஈரானால் ஆபத்துக் காணப்படுவதாகக் கூறியதோடு, “புலனாய்வுப் பிரிவினர், மீண்டும் பாடசாலைகளுக்கே செல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல், வடகொரியாவுடனான உறவு மிகச்சிறந்த நிலையில் காணப்படுகிறது எனவும் ஆபத்துகள் எவையும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

ஐ.அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரோடு பல்வேறு விடயங்களிலும் தொடர்ச்சியாக முரண்பட்டு வரும் ஜனாதிபதி ட்ரம்ப், அவற்றின் தொடர்ச்சியாகவே இவ்விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். ஆனால், ஜனாதிபதியின் கருத்துக்கு, ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.