முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்

முதன்முறையாக சந்திரனில் ஆய்வு நடத்துவதற்காக இஸ்ரேல் விண்கலம் அனுப்பவுள்ளது.

இந்த விண்கலம் எதிர்வரும் 22 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘பெரிஷீட்’ எனப்படும் 585 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது.

இந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் அருகேயுள்ள யெஹூட் நகரில் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இஸ்ரேல் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஷ் ஐ.எல்.’ நிறுவனத்தின் தலைவர் மோரிஸ்கான் கூறுகையில்,

“எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். சந்திரனுக்கு இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. தற்போது அதில் நாங்களும் இணைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.